Published : 12 Aug 2025 06:27 PM
Last Updated : 12 Aug 2025 06:27 PM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மகன் சுர்ஜித்திடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ். இவர் பட்டியலின சமூக இளைஞர். இவர் கடந்த 27ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். மேலும், சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சுர்ஜித்தின் பெற்றோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் உதவி ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ண குமாரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சுர்ஜித்தின் தந்தை சரவணனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், தற்போது, கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறையில் இருக்கும் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு திருநெல்வேலி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று இரவு பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள சிபிசிஐடி காவல் அலுவலகத்துக்கு சரவணன் மற்றும் சுர்ஜித் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான போலீஸார் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இன்றும் தொடர்ந்தது.
டிஎஸ்பிக்கள் ராஜ்குமார் நவ்ரோஜ், அருணாச்சலம், காவல் ஆய்வாளர்கள் உலகராணி, பார்வதி, சேகர், சந்தான லட்சுமி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிபிசிஐடி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதனால், சிபிசிஐடி அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சிபிசிஐடி எஸ்.பி. ஜவகர் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து, அங்கிருந்து இன்று பிற்பகலில் திருநெல்வேலி க்கு வந்தார். அவரும் தந்தை, மகன் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். கொலை நடைபெற்ற பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதிக்கு சரவணன், சுர்ஜித்தை அழைத்து சென்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT