Published : 11 Aug 2025 02:41 PM
Last Updated : 11 Aug 2025 02:41 PM
மதுராந்தகம்: செய்யூர் அடுத்த கொல்லத்த நல்லூர் கிராமப் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் லாரி மோதிய விபத்தில் புத்திரன்கோட்டை பகுதியை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக சித்தாமூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புத்திரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவரது உறவினரான சென்னை ஜவஹர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். மேற்கண்ட இருவரும் இன்று அதிகாலை, இருசக்கர வாகனத்தில் சூணாம்பேடு பகுதியிலிருந்து சித்தாமூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கொல்லத்து நல்லூர் கிராமப்பகுதி அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த, சித்தாமூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் கவனிக்குறைவால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT