Published : 11 Aug 2025 06:40 AM
Last Updated : 11 Aug 2025 06:40 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வீட்டில் தந்தை, மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். பழநி அருகேயுள்ள கணக்கம்பட்டி ராஜவாரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (53). கொத்தனார். இவரது மனைவி விஜயா. இவர்களது ஒரு மகன், ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகளான தனலட்சுமிக்கு (26) திருமணம் ஆகவில்லை. ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு, உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, மகன், மூத்த மகள் ஆகிய மூவரையும் திருச்செந்தூர் கோயிலுக்கு பழனியப்பன் அனுப்பிவைத்தார். வீட்டில் பழனியப்பனும், இளைய மகள் தனலட்சுமி மட்டும் இருந்தனர்.
திருச்செந்தூரில் இருந்து பழனியப்பனை குடும்பத்தினர் செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. அருகில் உள்ள உறவினருக்குத் தகவல் தெரிவித்தனர். உறவினர் ஒருவர் பழனியப்பன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, தனலட்சுமி இறந்து கிடந்தார். அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் பழனியப்பனும் இறந்துகிடந்தார்.
தகவலறிந்து வந்த ஆயக்குடி போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளைக் கொலை செய்துவிட்டு, பழனியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT