Published : 10 Aug 2025 09:51 AM
Last Updated : 10 Aug 2025 09:51 AM
மகனை கொலை செய்து விட்டதாக தாய் சூளைமேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், திடீர் திருப்பமாக தம்பியை கொலை செய்தது அண்ணன் என தெரியவந்துள்ளது.
சென்னை சூளைமேடு, பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா(47). இவரது கணவர் ராமச்சந்திரன். இந்த தம்பதிக்கு 3 மகன்கள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பிரமிளா, சூளைமேடு பெரியார் பாதையில் வசித்து வருகிறார்.
மூத்த மகன் வசந்தகுமார், சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் ராஜபிரபா (20) தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். 3-வது மகன் முகில் (19) இளம் வயதிலேயே திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வந்துள்ளார். மது மற்றும் கஞ்சா போதைக்கும் அடிமையாகி, தாயை மிரட்டி அடித்து துன்புறுத்தி அடிக்கடி பணம் பெற்று சென்றுள்ளார்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் ஓராண்டுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் முகிலை சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் மனநல காப்பகத்தில் இருந்து வந்த பின்பும், வழக்கம்போல அடிதடியில் இறங்கியுள்ளார். கோடம்பாக்கத்தில் நடந்த தகராறில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு 4 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து முகில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோடம்பாக்கம் வரதராஜபுரம் பகுதியில் தகராறில் ஈடுபட்டு வெட்டுக் காயத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு தன்னை வெட்டிய நபரை கொல்லப் போகிறேன் என கூச்சல் போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
பிரமிளா அவரை தடுத்து நிறுத்தி உள்ளார். இதனால், ஆத்திரத்தில் தாயை சரமாரியாக தாக்கி உள்ளார். இதேபோல், நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய் - மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் தாயை முகில் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தோடு தாக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் தூங்கும்போது முகில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து வடபழனி காவல் நிலையம் சென்று சரணடைந்த பிரமிளா, ‘போதை பழக்கத்துக்கு அடிமையான மகன் முகிலால் தினமும் அவமானத்தை சந்திப்பதுடன், நிம்மதியையும் இழந்தேன். இதனால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் முகிலை வெட்டிக் கொலை செய்து விட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து முகில் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முகில் உடலில் இருந்த 6 வெட்டுகளும் ஆழமான காயங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்த வெட்டுகள் 45 வயது பெண் தாக்கியது போல் இல்லை. இதையடுத்து, பிரமிளாவிடம் மீண்டும் விசாரித்தனர்.
இதில், கொலை செய்தது பிரமிளா இல்லை என்பதும், அவரது முதல் மகன் வசந்தகுமார், அவரது நண்பர் கண்ணன்(60) உடன் வந்து தம் பியை வெட்டிக் கொலை செய்தது தெரிந்தது. மகன் கைது செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொலைப் பழியை நானே ஏற்றுக் கொண்டேன் என தாய் பிரமிளா போலீஸாரிடம் கண்ணீர் விட்டபடி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வசந்தகுமார், கண்ணன், பிரமிளா ஆகிய 3 பேரை யும் போலீஸார் கைது செய்தனர். தாயார் பிரமிளாவை அடிக்கடி தாக் கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தம்பி முகிலை கொலை செய்துவிட்டேன் என வசந்தகுமார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT