Published : 10 Aug 2025 12:49 AM
Last Updated : 10 Aug 2025 12:49 AM
கடலூர்: புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தபோது பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த விசிகவைச் சேர்ந்த 1-வது வார்டு கவுன்சிலர் பாரதிதாசன் என்கிற காளிமுத்து, தனது வார்டில் செய்யப்பட்ட பணி தொடர்பாக கோப்பு தயார் செய்யும்படி கூறியுள்ளார்.
அதற்கு ராதாகிருஷ்ணன், “பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அந்தப் பணியை முடித்துவிட்டு, உங்கள் வார்டில் பணி செய்யப்பட்டதற்கான கோப்புகளை தயார் செய்து தருகிறேன்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் பாரதிதாசன், இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி,கொலை மிரட்டல் விடுத்து, அவரது முகத்தில் கையால் குத்தி தாக்கிஉள்ளார்.
இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன் புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில், புவனகிரி போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் சென்ற போலீஸார், தாக்குதல் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.
பின்னர், விசிக கவுன்சிலர் பாரதிதாசன் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து விசிக கவுன்சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT