Published : 07 Aug 2025 06:22 AM
Last Updated : 07 Aug 2025 06:22 AM
சென்னை: சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, 50 வயது மதிக்கத்தக்க ஆண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலையம் அருகே கடந்த 31-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை இளைஞர்கள் இருவர் சரமாரியாக கட்டையால் தாக்கினர். அந்த வழியாகச் சென்றவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே 2 இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து வியாசர்பாடி போலீஸார் நிகழ்விடம் விரைந்து தாக்குதலுக்கு உள்ளானவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் அவரை அடித்துக் கொலை செய்தது வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஆசிப் என்ற கார்த்திக் (23), அதேபகுதி சஞ்சய் நகரைச் சேர்ந்த அலெக்ஸ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கொலை செய்தது ஏன் என போலீஸாரிடம் கார்த்திக் கூறும்போது, ``சம்பவத்தன்று அதிகாலை எனது சகோதரி மகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையறிந்த எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நண்பரான அலெக்ஸை அழைத்துக் கொண்டு, இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கினோம்'' என கார்த்திக் தங்களிடம் வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே, கொலையான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT