Published : 07 Aug 2025 05:41 AM
Last Updated : 07 Aug 2025 05:41 AM
கோவை: கோவையில் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை வைஸ்யாள் வீதியில் உள்ள கடைவீதி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியில் இருந்தார்.
நள்ளிரவில் சுமார் 60 வயதான ஒருவர் அங்கு வந்து, யாரோ தன்னை தாக்குவதற்காக பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். செந்தில்குமார் வெளியே வந்து பார்த்தபோது யாரும் இல்லை. இதையடுத்து, அந்த நபரை அனுப்பிவிட்டு, செந்தில்குமார் காவல் நிலையத்துக்கு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று காலை உதவி ஆய்வாளர் நாகராஜ் முதல் தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றார். அறைக்கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. உள்ளே பார்த்தபோது ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸார் அறைக்கதவை உடைத்து, சடலத்தை மீட்டனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர் பேரூர் சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன்(60) என்பதும், திருமணமாகாத அவர், பேரூரில் தனது சகோதரி குடும்பத்தினருடன் தங்கி, கட்டுமான வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர், துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் கூறும்போது, “புகார் தெரிவித்தவுடன் காவலர் செந்தில்குமார், அந் நபரை விசாரித்து அனுப்பியுள்ளார். பின்னர், காவலருக்குத் தெரியாமல், உள்ளே நுழைந்து, உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அறிவொளி ராஜன் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.யாரோ தன்னை பின்தொடர்வதாகவும், தாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.
இதற்கிடையில், அறிவொளி ராஜன் நேற்று முன்தினம் மதியம் நீதிமன்ற வளாகத்துக்குச் சென்று,தன்னை யாரோ தாக்குவதாகவும் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலைக்கு பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆயுதப்படைக்கு மாற்றம்: இதற்கிடையே, காவல் நிலையத்தில் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோரை மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT