Published : 07 Aug 2025 12:41 AM
Last Updated : 07 Aug 2025 12:41 AM
உடுமலை/ திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்எல்ஏவின் தென்னந்தோப்பில் வசித்து வந்த தந்தை - மகன் இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி, அவர்களது மூத்த மகன் மணிகண்டன் (30), அவரது மனைவி சபீனா ஆகியோர் அங்கு தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது 2-வது மகன் தங்கபாண்டி (28) நேற்று முன்தினம் வந்துள்ளார். இரவு கறிவிருந்துடன் மது அருந்தியுள்ளனர். அப்போது, மதுபோதையில் மூர்த்திக்கும், மகன் தங்கபாண்டிக்கும் மோதல் ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில், இருவரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் ஜீப் ஓட்டுநரும், ஆயுதப்படை காவலருமான அழகுராஜா ஆகியோர் உடனே அங்கு விரைந்து சென்றனர். மோதலில் காயமடைந்த மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க சிறப்பு எஸ்.ஐ.சண்முகவேல் ஏற்பாடு செய்தார். அப்போது, இருட்டில் மறைந்திருந்த தங்கபாண்டி திடீரென தாக்கியதில், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடன் வந்தவர்களையும் தங்கபாண்டி அரிவாளால் தாக்க முயன்றதால், ஆயுதப்படை காவலர், பண்ணை மேலாளர் ஆகிய இருவரும் தப்பி வந்து குடிமங்கலம் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றபோது, சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து அனைவரும் தலைமறைவாகி விட்டனர். கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலுவுக்கு, உமா மகேஸ்வரி என்ற மனைவியும், லலித் (25) என்ற மகனும் உள்ளனர். உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள வாஞ்சிநாதன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தாராபுரம் பொன்னாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உமா மகேஸ்வரி உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மோதலை தடுக்க சென்ற இடத்தில், சிறப்பு எஸ்.ஐ. வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க்ரிஷ் யாதவ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் உடல், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சண்முகவேலின் மகன் லலித்குமார் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதற்கிடையே, நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்து, சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஐ.ஜி. செந்தில்குமார், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சண்முகவேல் உடலுக்கு தமிழக தலைமை டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். சண்முகவேலின் மனைவி, மகனுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிபிஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் சண்முகவேல் உடலை சுமந்து சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். மின் மயானத்தில் போலீஸார் 21 குண்டுகள் முழங்க சண்முகவேல் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன் (உடுமலை), மகேந்திரன் (மடத்துக்குளம்), போலீஸார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர், சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, கொலையில் தொடர்புடைய மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டி ஆகிய இருவரும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று மாலை சரண்அடைந்தனர். மேல் விசாரணைக்காக உடுமலைப்பேட்டைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர். மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டனை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT