Published : 06 Aug 2025 06:10 AM
Last Updated : 06 Aug 2025 06:10 AM
சென்னை: திருவள்ளூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (26). வேலூர் அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, மருத்துவ மேல் படிப்புக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
வேலூரில் மருத்துவம் படித்தபோது தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். சென்னையில் டி.பி. சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். அவருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வந்த சக மாணவர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வெவ்வேறு சமூகம் என்பதால், முதலில் இருவரின் குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானமாகிவிட்டதாகவும், படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், திவ்யாவின் தோழிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் டி.பி. சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது திவ்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட மாணவி திவ்யா சிறிது காலம் தோழிகளுடன் கூட சரியாகப் பேசாமல் இருந்துள்ளார். எப்போதும் தனிமையை விரும்பியுள்ளார். மேலும், அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, திருமண விவகாரம் தொடர்பாக பெற்றோர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்களா? காதலருடன் ஏதேனும் கருத்து வேறுபாடா? மருத்துவப் பணிச்சுமை அல்லது அழுத்தம் காரணமா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?என்பன உட்பட பல்வேறு கோணங்களில் டி.பி. சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை தடுப்பு உதவி எண் தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண் - 022-25521111 ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்ளலாம். உரிய வழிகாட்டல் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT