Last Updated : 06 Aug, 2025 08:24 AM

1  

Published : 06 Aug 2025 08:24 AM
Last Updated : 06 Aug 2025 08:24 AM

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை - உடுமலை அருகே பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்.

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் தந்தை - மகன் பிரச்சினையை காவல் துறையினர் விசாரிக்க சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல், தந்தை - மகன் சண்டையை பிரித்து மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்தார். உடன் இருந்த ஓட்டுநரையும் துரத்திச் சென்றுள்ளார். அவர் தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடிமங்கலம் போலீஸார் தப்பிச் சென்ற தங்கபாண்டியை தேடி வருகின்றனர். கோவை சரக டிஐஜி, திருப்பூர் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x