Published : 05 Aug 2025 11:21 AM
Last Updated : 05 Aug 2025 11:21 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று குழந்தைகளை கழுத்தறுத்துக் கொலை செய்து தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் மேற்கொண்டு இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவரது மனைவி பாரதி (26) இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் மூன்று பெண் குழந்தைகள் என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் குழந்தைகளுடன் திங்கட்கிழமை இரவு உணவு அருந்திவிட்டு மனைவி பாரதி, மற்றும் ஒரு வயதே ஆன தனது ஆண் குழந்தை அனீஸ்வரன் ஆகியோருடன் படுக்கையறையில் உறங்கச் சென்றதாக தெரிகிறது. பின்னர் படுக்கை அறையை பூட்டிவிட்டு தனியே வெளியே வந்த அவர் அதிகாலை 3 மணி அளவில் கோவிந்தராஜ் வீட்டின் ஹாலில் படுத்திருந்த 3 பெண் குழந்தைகளை அரிவாளை கொண்டு தலைப்பகுதியில் வெட்டி துண்டித்து கொலை செய்து, பின்னர் அவரும் அருகில் இருந்த பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு படுக்கையறையில் படுத்திருந்த மனைவி பாரதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிந்தராஜ், பிரக்திஷா ஸ்ரீ (10),
ரித்திகா ஸ்ரீ (7), தேவா ஸ்ரீ (6) ஆகிய மூன்று பெண் குழந்தைகளின் சடலம் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக காவல் துறையின் விசாரணையில் கோவிந்தராஜ் தனது தொழில் மற்றும் வீட்டு கடன் காரணமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும் அதற்கு முறையாக பணம் கட்ட முடியாத நிலை தற்போது இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது பெற்ற மூன்று பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு கடன் தொல்லை தான் காரணமா? வேறு ஏதாவது பிரச்சினையா என மங்களபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT