Published : 04 Aug 2025 01:25 PM
Last Updated : 04 Aug 2025 01:25 PM
வெளி மாநிலங்களிலிருந்து கடந்த 3 நாட்களில் லாரி, ரயில், பேருந்துகளில் நூதன முறையில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் 24 பேரை போலீஸார் கைது செய்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைத் தடுக்க ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் துறையினர் சிறப்பு சோதனைகளில் ஈடுபடுகின்றனர். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆலோசனையின்பேரில் வெளி மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வரும் தனியார், அரசு பேருந்துகள், ரயில்களில் சோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீஸார் இணைந்து வெளிமாநில பேருந்துகள் வரும் முக்கியச் சாலைகளில் கடந்த 3 நாட்களாக தீவிர தோதனை நடத்தினர்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை வந்த பேருந்து ஒன்றில் 4 பேர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் பாத்திமா கல்லூரி அருகே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அரசுப் பேருந்து ஒன்றிலிருந்து இறங்கிய 4 பேரது உடைமைகளை சோதனையிட்டனர். இவர்கள் மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (23), சிவராம பாண்டியன் ( 22), அருண் பாண்டியன் (26), பிரத்வி ராஜ் (26) எனத் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 2 ஆயிரம் கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், ஒடிசா மாநிலத்திலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்து, இங்குள்ள சில இளைஞர்களை ஒரு நெட்வொர்க்காக இணைத்து கஞ்சா விற்பதும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் கூடல்புதூர் பகுதியில் கோகுல் (21), சக்திவேல் (21), ஈஸ்வரன் (20), ஆதீஸ்வரன் (29), வேல்முருகன் (21) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 24 பேரை மதுரை மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மேலும், 30 கிலோ கஞ்சா, தலா ஒரு பைக், லாரி, 12 செல்போன்கள், 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மதுவிலக்கு போலீஸார் கூறியதாவது: கஞ்சா கடத்தலில் கைதான 24 பேருமே இளைஞர்கள். இவர்கள் சிறையில் இருந்தபோது நண்பர்களாக பழகி, வெளிமாநிலங்களில் கஞ்சா விற்கும் நபர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி கடத்துகின்றனர். பெரும்பாலும் ஒரே வாகனத்தில் பயணிக்காமல் ஆங்காங்கே இறங்கி வெவ்வேறு லாரி, பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
மதுரை வந்ததும் ஏற்கெனவே கஞ்சா விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களை இணைத்து நெட்வொர்க் ஏற்படுத்தி, அதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதைப் பொருட்களை விற்றுள்ளனர். கஞ்சா கடத்தலை தடுக்க சோதனைகள் தொடரும். முன்பெல்லாம் கஞ்சா கடத்தலில் 40 வயதுக்கு மேற்பட்டோர்தான் ஈடுபட்டனர்.
தற்போது 17 வயது சிறுவர்கள் முதல் 30 வயதுக்குள்ளான இளைஞர்கள் அதிக எண்ணிககையில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதற்குப் போதைப் பழக்கத்துக்கு அடிமையானது மற்றும் குறுக்கு வழியில் பணம் சாம்பாதிக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் சிலரிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT