Published : 02 Aug 2025 05:53 AM
Last Updated : 02 Aug 2025 05:53 AM
சென்னை: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும் போது காவல் வாகனத்தில், போலீஸார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். மேலும், ‘உன் முகத்தை பார்த்து விட்டேன்.
கொல்லாமல் விடமாட்டேன்’ என போலீஸாரை ரவுடி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை அண்ணாநகர் பகுதியில் நடந்த ராபர்ட் என்ற ரவுடி கொலை தொடர்பான வழக்குவிசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரவுடி ராபர்ட் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என மொத்தம் 26 பேர் நேற்று முன்தினம் காலை காவல் வாகனத்தில் புழல் சிறையில் இருந்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், இரவு 8 மணியளவில் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைதிகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் பெண் போலீஸார் உள்பட 15 போலீஸார் காவலுக்கு இருந்தனர். காவல் வாகனம் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் இருந்தவர்கள் திடீரென பாட்டுப்பாடி கிண்டல் செய்து போலீஸாரை சீண்டினர். அமைதி காக்கும்படி போலீஸார் கூறியும் அவர்கள் கேட்காமல் தகராறு செய்தனர்.
இதையடுத்து வாகனத்தை ஓட்டிய காவலர் நவீன் குமார், வியாசர்பாடியில் செல்லும்போது வாகனத்தின் வேகத்தை குறைத்தார். இதை பயன்படுத்தி பின்னால், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் போலீஸ் வாகனத்தில் இருந்த தங்களது நண்பர்களுக்கு கஞ்சா பொட்டலத்தை வீசிவிட்டு அதிவேகமாக அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தில் இருந்தவர்களைக் கண்டித்த னர். இதனால், ஆத்திரம் அடைந்தகைதிகளில் சிலர் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டினர். மேலும், கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு மட்டும் அல்லாமல் கைதிகளில் ஒருவர் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினார். தொடர்ந்து ஒருவர், ‘உன் முகத்தை பார்த்து விட்டேன்.
உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’ என போலீஸாரை மிரட்டினார். இதற்கிடையே வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து கைதிகளும் மீண்டும் புழல் சிறைக்கு இரவு 9.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். கைதிகளின் அடாவடித் தனத்தை காவல் வாகனத்தில் இருந்த பெண் போலீஸார் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று காலை முதல் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தாக்குதல் விவகாரம் தொடர்பாக, மோதல் நடைபெற்ற இடத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட 26 கைதிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT