Published : 01 Aug 2025 02:47 PM
Last Updated : 01 Aug 2025 02:47 PM

“தொய்வாக செல்கிறது ரிதன்யா தற்கொலை வழக்கு...” - தந்தை அச்சம்

ரிதன்யா வழக்கில் தவறு செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று உள்துறை செயலர், டிஜிபி அலுவலகங்களில் புகார் அளித்த அவரது தந்தை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை நேற்று தலைமை செயலகத்தில் உள்துறை செயலர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: என் மகள் இறப்பில் சாதாரண பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நான் எஸ்பி அலுவலகத்தில் கேட்ட போது, மகளின் ஆடியோ விசாரணை, உடல் கூறு ஆய்வு, செல்போன் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான அறிக்கை வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

நானும் அறிக்கை வரும் என காத்திருந்தேன். கடந்த 10-ம் தேதி மனு கொடுத்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் வழக்கு தொய்வாக செல்கிறதோ என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். டிஜபியும் நேரடியாக எஸ்பியிடம் பேசினார். என் மகள் இறக்கும் தருவாயில் பேசியது உலகம் முழுவதும் எல்லோரும் கேட்டிருப்பார்கள். அதில் என் மகள் அனுபவித்த சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது.

அதற்காகதான் நான் பெண் வன்கொடுமை சட்டத்தை சேர்க்கும்படி புகார் தெரிவித்துள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். நீதித்துறையும், தமிழக அரசும் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து என் மகளுக்கு நீதி வழங்குவார்கள் என்று நம்புகிறேன். பெண்ணை இழந்த நிலையில், வழக்கு ரொம்ப தொய்வாக செல்கிறதோ என்று அச்சம் தோன்றுகிறது.

குற்றம் செய்தவர்களின் உறவினர் திருப்பூரில் காங்கிரசில் மாவட்ட தலைவராக இருக்கிறார். அதனால் தான் எனக்கு சந்தேகம் வந்தது. வழக்கிலும் சரியான பிரிவு பதிவு செய்யவில்லை. இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை உலகில் வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக டிஜிபி அலுவலகத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x