Published : 01 Aug 2025 06:41 AM
Last Updated : 01 Aug 2025 06:41 AM
சென்னை: தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் அழகுபாண்டியன் (29). பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ்ப்பாக்கம் பகுதி விநியோகஸ்தராக உள்ளார்.
இவருக்கு முகநூல் மூலம் தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கீர்த்தனா (30) மற்றும் அவரது கணவர் பிரபு இன்பதாஸ் (44) அறிமுகமாகினர். இவர்கள் தங்களுக்கு உயர் அரசு அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிகுந்த நபர்கள்பலரை தெரியும் என்று தெரிவித்தனர்.
இதை உண்மை என நம்பிய அழகு பாண்டியன், தான் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு தேவையான பணத்துக்கு கடன் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா? எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் குறைந்த வட்டியில் தொழில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதற்கு கமிஷனாக கடந்த 2 ஆண்டுகளாக பல தவணைகளாக மொத்தம் ரூ.16 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி கடன் பெற்றுக் கொடுக்காததாலும், கமிஷனாக பெற்ற பணத்தை திரும்ப கொடுக்காததாலும் அதிர்ச்சி அடைந்த அழகுபாண்டியன், இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அழகுபாண்டியன் அளித்த புகார் உண்மை என தெரியவந்ததையடுத்து, தலைமறைவாக இருந்த பிரபு இன்பதாஸ், அவரது மனைவி கீர்த்தனா ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT