Published : 01 Aug 2025 06:19 AM
Last Updated : 01 Aug 2025 06:19 AM
உடுமலை: வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில், பழங்குடி மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மேல் குருமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(45). விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள், மகள்கள் சிந்து, ராதிகா.
மாரிமுத்து உள்ளிட்ட 4 பேர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இருந்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தால் மாரிமுத்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மூணாறு செல்வதற்காக பேருந்தில் சென்ற மாரிமுத்துவை, சின்னாறு வனத் துறை சோதனைச்சாவடியில் இருந்த வனத் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது மாரிமுத்துவிடம் புலியின் பல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், உடுமலை வனச்சரக அலுவலகத்துக்கு மாரிமுத்துவை அழைத்துச் சென்று இரவு முழுவதும் விசாரித்துள்ளனர். இதுகுறித்து மாரிமுத்துவின் குடும்பத்துக்கு தகவல் அளிக்கவில்லை. இதற்கிடையில், நேற்று காலை வனத் துறை அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாரிமுத்து இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்து வந்த உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான போலீஸார் மாரிமுத்துவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்கள் உடுமலை வனச்சரக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். வனத் துறையினர் மாரிமுத்துவை அடித்துக் கொன்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறும்போது, “வனத் துறை அதிகாரிகள் மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணை என்ற பெயரில், மாரிமுத்துவை வனத் துறையினர் அடித்துக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றனர். மாரிமுத்துவின் மனைவி பாண்டியம்மாள் உடுமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நாங்கள் பழங்குடியினர்.
சட்டத்துக்குப் புறம்பாக மாரிமுத்துவை வனத் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அவர் உயிரிழந்ததற்கு வனத் துறையினர்தான் காரணம். இது தொடர்பாக முழுமையாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாரிமுத்துவின் உடல் போலீஸார் பாதுகாப்புடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது.
திருப்பூர் ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். எனினும், கைது தொடர்பாக குடும்பத்தாருக்கு சொல்லாதது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவரது உடலில் காயங்கள் இல்லை என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT