Published : 01 Aug 2025 06:02 AM
Last Updated : 01 Aug 2025 06:02 AM
திருநெல்வேலி: ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார்.
இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். சுர்ஜித்தின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வ கணேஷின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சரவணனை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்த நிலையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான ஆவணங்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன், இருசக்கர வாகனம், சிசிடிவி பதிவுகள் ஆகியவற்றையும், பாளையங்கோட்டை போலீஸார் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சுபாஷினியின் வீடியோ... இதனிடையே, கவின் செல்வ கணேஷ் காதலித்த சுபாஷினியின் தன்னிலை விளக்க வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சுபாஷினி, “என்ன நடந்தது என்பது, எனக்கும், கவினுக்கும் மட்டும்தான் தெரியும். எங்கள் தொடர்பு குறித்து யாரும் தவறாகப் பேச வேண்டாம்.
உண்மை தெரியாமலும் பேச வேண்டாம். எனது அப்பா, அம்மாவுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது தவறு. அவர்களை விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT