Published : 31 Jul 2025 06:23 AM
Last Updated : 31 Jul 2025 06:23 AM
சென்னை: ஹவுராவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயில்களில் அடுத்தடுத்து 2 நாட்களில் மட்டும் ரூ.3.40 லட்சம் மதிப்பிலான உலர்ந்த கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் ஆய்வாளர் ஜெபாஸ்டியன் தலைமையில் உதவி ஆய்வாளர் அன்புசெல்வன், தலைமைக் காவலர் கண்ணன் மற்றும் ஆர்பிஎஃப் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 7-வது நடைமேடைக்கு இரவு 8.20 மணி அளவில் மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில் வந்தது.
அந்த ரயிலில் எல்லா பெட்டிகளிலும் ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து சோதித்தபோது, பொது பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை உரிமை கோரி யாரும் முன்வரவில்லை. இதையடுத்து, அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் பச்சை நிற உலர்ந்த கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 4 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.
இந்த கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்த நபர் யார், எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த திங்கள்கிழமை இரவு ஹவுராவில் இருந்து எழும்பூர் வந்த வாராந்திர விரைவு ரயிலில் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான சுமார் 3 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
அடுத்தடுத்து, இரண்டு நாட்களில், ஹவுராவில் இருந்து எழும்பூருக்கு வந்த ரயில்களில் 7 கிலோ கஞ்சா கடத்தப்பட்டதால், போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, ஆர்பிஎஃப் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT