Published : 31 Jul 2025 06:16 AM
Last Updated : 31 Jul 2025 06:16 AM
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பைனான்சியர் வீட்டில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, மலேசியாவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அருகில் வசிப்பவர் கார்த்தி(46).
பைனான்சியர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் ஓர் அறையில் கார்த்தியும், மற்றொரு அறையில் அவரது மனைவி, 2 மகள்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர், கார்த்தியின் மனைவி, மகள்களிடம் கத்தியைக் காண்பித்து, நகைகளை கழற்றித் தருமாறு மிரட்டியுள்ளனர்.
மனைவி, மகள்களின் கூச்சலைக் கேட்டு எழுந்துச் சென்ற கார்த்தியை 3 பேரும் கத்தியால் தாக்கியுள்ளனர். கார்த்தியும் பதிலுக்கு அவர்களை தாக்கியுள்ளார். இதனிடையே, சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது, வாயிலில் காத்திருந்த மேலும் 2 கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
பின்னர், வீட்டில் இருந்த 3 பேரையும் பிடித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மலேசியாவைச் சேர்ந்த சரவணன் (44), இளவரசன்(26), கோபி(30) என்பது தெரியவந்தது. இதை யடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கார்த்தி வீட்டில் ஏற்கெனவே தோட்ட வேலை பார்த்து, பின்னர் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றவர் குமார் என்கிற குமரன் (40). இவருக்கு மலேசிய குடியுரிமை பெற்ற சரவணன், இளவரசன், கோபி, விமலன்(19) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பைனான்சியர் கார்த்தி வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக மலேசியாவில் இருந்து ஜூலை 13-ம் தேதி தன்னுடன் 4 பேரையும் குமரன் அழைத்து வந்து திருச்சியில் தங்க வைத்துள்ளார். பின்னர், ஜூலை 26-ம் தேதி திருத்துறைப்பூண்டிக்கு அழைத்து வந்து, நண்பர் வீட்டில் தங்க வைத்து, கார்த்தியின் வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கார்த்தி வீட்டுக்குச் சென்ற 5 பேரில், குமரன், விமலன் ஆகியோர் வீட்டுக்கு வெளியே காவலுக்கு நிற்க, மற்ற 3 பேரும் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.ஆனால், கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். தப்பியோடிய குமரன், விமலன் ஆகியோரைத் தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர். இதற்கிடையில், விமலனை திருச்சியில் போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT