Published : 30 Jul 2025 12:21 PM
Last Updated : 30 Jul 2025 12:21 PM
பெங்களூரு: கர்நாடகாவில் எச்ஐவி பாதித்த தம்பியை அவரது அக்காவும், மாமாவும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கவுரவத்துக்காக கொலை நடந்ததா? சொத்துக்காக கொலை நடந்ததா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தும்மி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன் (23). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 23ம் தேதி பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா திரும்பும்போது கார் விபத்தில் சிக்கினார். இதனால் காயமடைந்த மல்லிகார்ஜூன் தாவணகெரேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே மல்லிகார்ஜூனின் உடல் நிலை சீராகாததால் மருத்துவர்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்லுமாறு கூறினர்.
இதனால் மல்லிகார்ஜூனின் தந்தை நாகராஜப்பா, தனது மகள் நிஷா (25) மற்றும் அவரது கணவர் மஞ்சுநாத்திடம் பெங்களூரு கொண்டு செல்லுமாறு கூறினார்.
இதையடுத்து நிஷாவும் மஞ்சுநாத்தும் மல்லிகார்ஜூனை கார் மூலம் பெங்களூரு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் பெங்களூருவுக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக உடலை ஜூலை 26-ம் தேதி ஊருக்கு கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகார்ஜூனின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
இந்நிலையில் மல்லிகார்ஜூனின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அவரது தந்தை நாகராஜப்பா சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து நிஷா மற்றும் அவரது கணவர் மஞ்சுநாத்திடம் கேள்வி எழுப்பினார். அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் பலத்த சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து ஹொலேகெரே போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்திய போது, “என் தம்பிக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட விஷயம் உறவினர்களுக்கு தெரிந்தால் அவமானமாக இருக்கும். விபத்தில் படுகாயம் அடைந்ததால் அவரை காப்பாற்ற நிறைய பணம் தேவைப்படும். குடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காகவும் பணப் பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் மல்லிகார்ஜூனை கழுத்தை நெறித்து கொலை செய்தோம்.” என கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீஸார் தம்பியை கொன்ற நிஷா, அவரது கணவர் மஞ்சுநாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே மல்லிகார்ஜுனின் தந்தை நாகராஜப்பா, ''சொத்துக்காக எனது மகனை அவனுடைய அக்காவும், மாமாவும் கொலை செய்துள்ளனர். இந்த கொலை எச்ஐவி.நோய் காரணமாக நடக்கவில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்துள்ளனர்.” என போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீஸார் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT