Published : 30 Jul 2025 07:57 AM
Last Updated : 30 Jul 2025 07:57 AM
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாம் இளைஞர் ராஜுபிஸ்வகர்மாவை 4 நாள் காவலில் விசாரிக்க திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று போலீஸாருக்கு அனுமதி வழங்கியது. மேலும், நீதிமன்ற வளாகத்தில் ராஜுபிஸ்வகர்மாவை வழக்கறிஞர்கள் தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தனிப்படையினர், ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் தாபா ஒன்றில் பணிபுரிந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்ற இளைஞரை கடந்த 26-ம் தேதி கைது செய்தனர். அவரிடம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.
பிறகு, ராஜு பிஸ்வகர்மா திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஷ்வரி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கு ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இச்சூழலில், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜு பிஸ்வகர்மாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நேற்று முன் தினம் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணைக்காக, புழல் மத்திய சிறையில் இருந்து, முகத்தை மூடியவாறு ராஜுபிஸ்வகர்மா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீஸார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி உமா மகேஷ்வரி, ராஜு பிஸ்வகர்மாவை 4 நாள் காவலில் விசாரிக்கபோலீஸாருக்கு அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜுபிஸ்வகர்மா, கும்மிடிப்பூண்டி பகுதிக்கு போலீஸாரின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், ராஜு பிஸ்வகர்மாவை தாக்க முயன்றனர். அவர்களை, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் டிஎஸ்பிக்கள் ஜெயஸ்ரீ, தமிழரசி ஆகியோர் தலைமையிலான சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT