Published : 29 Jul 2025 10:48 AM
Last Updated : 29 Jul 2025 10:48 AM
புதுச்சேரி: யூடியூபில் பெண்களை தரக்குறைவாக விமர்சித்த விருதுநகர் யூடியூபரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் அருகே உள்ள சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி.கே.விஜய் என்கிற துர்க்கை ராஜ் மீது தமிழகத்தில் 4 இடங்களிலும், புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் புகார்கள் உள்ளன.
இவர் மீது சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துர்க்கை ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், வழக்குகள் விசாரணையில் இருக்கும்போது, சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பெண்களுக்கு மிரட்டல் விடுவது, அவர்களுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து தரக்குறைவான வார்த்தைகளை பதிவிடுதல் என மீண்டும் தவறான செயல்களில் ஈடுபட்டார்.
இதுபற்றி புகார்கள் வந்ததால் புதுச்சேரி எஸ்எஸ்பி நித்யா, எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தாள் கிராமத்தில் உள்ள இல்லத்தில் துர்க்கைராஜை கைது செய்து, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி எஸ்பி நித்யா கூறும்போது, “யூடியூபில் பிரபலமாக இருக்கின்ற பெண்களை அவர்களுடைய சேனலுக்கு சென்று நட்பாக பேசி அவர்களுடைய புகைப்படத்தை பெற்றுகொண்டு, அதில் தரக்குறைவான வார்த்தைகளை சேர்த்து தனது யூடியூப் சேனலில் ஆடியோ லைவ் பதிவிட்டு விமர்சித்துள்ளார். அதேபோல், முக்கிய தமிழக அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பெண்கள் மீது தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தாலோ அல்லது அவர்களுடைய பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். எனவே, இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதள உபயோகிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT