Published : 29 Jul 2025 06:42 AM
Last Updated : 29 Jul 2025 06:42 AM
தூத்துக்குடி: பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மற்றும் அவர்களது மகன் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறு முகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் செல்வகணேஷ், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர், அஷ்டலெட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் வந்திருந்தார்.
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், கவின் செல்வ கணேஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் கவின் செல்வகணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி, கேடிசி நகரைச் சேர்ந்த சுர்ஜித் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. கேடிசி நகரைச் சேர்ந்த சரவணன், இவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் மணி
முத்தாறு ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்களது மகன்தான் சுர்ஜித். ஒரு மகளும் இவர்களுக்கு உள்ளார். சரவணனின் மகளும், கவின் செல்வகணேஷும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சரவணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இந்த பின்னணியில் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுர்ஜித்தை போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலைக்கு தூண்டியது உள் ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, சுர்ஜித் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது சகோதரியுடன் பழகுவதை நிறுத்துமாறு எச்சரித்தும், கவின் செல்வகணேஷ் அதை பொருட்படுத்தவில்லை. இதனால், அவரை கொலை செய்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சாலை மறியல்: இந்நிலையில், ‘கவின் செல்வ கணேஷை கொலை செய்த இளைஞரின் பெற்றோர்களான சப்-இன்ஸ் பெக்டர்களை கைது செய்ய வேண்டும்’ எனக் கூறி உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள முக்காணியில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகர உதவி காவல் ஆணையர் சுரேஷ், தூத்துக்குடி ஏடிஎஸ்பிகள் திபு, சகாய ஜோஸ், ஏஎஸ்பி மதன் ஆகியோர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ‘சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்’ என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT