Published : 28 Jul 2025 05:22 AM
Last Updated : 28 Jul 2025 05:22 AM
சென்னை: ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை வந்த போனில், எதிர்முனையில் பேசிய நபர் ‘முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ எனக் கூறி இணைப்பை துண்டித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸார், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் வீட்டு வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்து பார்த்தனர்.
பலமணி நேர சோதனைக்கு பின்னர் சந்தேகப்படும்படி எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த ஆசாமியை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல், நேற்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்து போன் இணைப்பை துண்டித்தார்.
இதையடுத்து, நீலாங்கரை போலீஸார் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கும் சந்தேகப்படும்படி எந்த வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த மிரட்டலும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் என தெரியவந்தது. இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடைசியாக டிவியில் யாரை பார்க்கிறாரோ அவரது பெயரை குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் இவர் இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் சூர்யா உட்பட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதேபோல், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னை விமான நிலையத்துக்கும் நேற்று முன்தினம் இரவு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் எதுவும் சிக்கவில்லை. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு இதுவரை தொடர்ந்து 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT