Published : 27 Jul 2025 04:35 PM
Last Updated : 27 Jul 2025 04:35 PM
சென்னை: ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி ரூ.65.50 லட்சம் மோசடி செய்ததாக தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பாலவாக்கம், பாரதிநகரில் வசித்து வரும் பெண் மோஷேல் இஸ்மைல் (53). இவர், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனது கணவர் 2018 முதல் 2021 வரை சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். அப்பொழுது தனது உறவினரான தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிலால் ஹைதர் (30) மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாங்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகவும் கூறினார்கள்.
இதை உண்மை என நம்பி 2018 முதல் 2021 வரை பல தவணைகளாக காசோலைகளாகவும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.52.50 லட்சம் பணம் கொடுத்தேன். இதேபோல், எனது மற்றொரு உறவினர் ரூ.13 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு, பிலால் ஹைதர் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பிலால் ஹைதர், அவரது கூட்டாளி செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஹரிஹரசுதன் (30), அவரது தந்தை பன்னீர்செல்வம் (71) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT