Published : 26 Jul 2025 06:34 PM
Last Updated : 26 Jul 2025 06:34 PM
சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூரைச் சேர்ந்தவர் ராஜாராமன் (54). எழும்பூர் ஆயுதப்படை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர். இவர் அயல் பணியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த 18-ம் தேதி இரவு எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை அருகே வணிக வளாகத்தில் உள்ள தனியார் பாருக்கு ராஜாராமன் வந்தார். அங்கு அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான 2 பேர் வந்திருந்தனர். மூவரும் மது அருந்திவிட்டு, வணிக வளாகம் முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, ராஜாராமனுக்கு மற்ற இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ராஜாராமனை கடுமையாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டு இருவரும் தப்பி சென்றனர். இதில் ராஜாராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுயநினைவின்றிக் கிடந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே, ராஜாராமனின் மனைவி கோகிலாம்பாள் (50), எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், ராஜாராமனுடன் தகராறில் ஈடுபட்டு அவரைக் கீழே தள்ளிவிட்டது கண்ணகி நகரைச் சேர்ந்த சரத்குமார் (எ) ஐயப்பா (36), நீலாங்கரையைச் சேர்ந்த ராகேஷ் (30) என்பது தெரியவந்தது. போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, தலைமறைவாக இருந்த சரத்குமார், ராகேஷ் ஆகிய இருவரையும் பெங்களூரு மத்திகரை பகுதியில் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அந்த இருவருக்கும் அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்திருந்த, ராகேஷின் நண்பர் வளசரவாக்கத்தைச் சேர்ந்த நவோதித் (26) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT