Published : 26 Jul 2025 06:22 AM
Last Updated : 26 Jul 2025 06:22 AM
சென்னை: புழல் பகுதியில் பெண்கள் சிலர் குழந்தைகளை விற்பனை செய்ய முயல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. எனவே புழல் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் புழல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தங்கள் பகுதியில் பெண்கள் 3 பேர் இரண்டரை வயது குழந்தை ஒன்றை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை வைத்து விற்பனை செய்ய முயல்வதாக கூறினார்.
இதையடுத்து சூரப்பட்டைச் சேர்ந்த தீபா (38), அம்பத்தூரைச் சேர்ந்த வித்யா (36), தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரதி தேவி (35) ஆகிய 3 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில் ரதிதேவியின் குழந்தையை விற்பனை செய்ய வித்யா, தீபா கூட்டு சேர்ந்து முயன்றது தெரியவந்தது.
எனவே ரதிதேவி உட்பட 3 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ரதிதேவி கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. இதை கவனித்துக் கொள்ள முடியாமல் திணறியுள்ளார்.
இது தொடர்பாக தனது தோழி வித்யாவிடம் கூறி அழுதுள்ளார். அவர் தீபாவிடம் கூறி இது தொடர்பாக ஆலோசித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை பணத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை வைத்து விற்பனை செய்ய, நண்பரான கார்த்திக்கை தொடர்பு கொண்டுள்ளனர். அவருக்கு இதில் உடன்பாடு இல்லாததால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்டதோடு மேலும் அவர்களிடமிருந்து 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டவர்களா என தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT