Published : 25 Jul 2025 08:23 PM
Last Updated : 25 Jul 2025 08:23 PM
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளியை 12 நாட்களுக்கு மேலாக தேடி வரும் தனிப்படை போலீஸார் இன்று மாலை ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்தனர். அந்த இளைஞரின் உருவ அமைப்பு மற்றும் ஆடைகள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளோடு ஒத்திருப்பது போல் தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞரை போலீஸார் திருவள்ளூர் மாவட்ட பகுதிக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தனிப்படை போலீஸாரிடம் சிக்கிய இளைஞரின் புகைப்படம், பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியிடம் போலீஸார் காட்டியபோது, அச்சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர் இவர்தான் எனச் சொன்னதாக கூறப்படுகிறது. அத்துடன், போலீஸாரிடம் சிக்கிய இளைஞர், சூளூர்பேட்டையில் தாபா உணவகத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநில இளைஞரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை முடிவுக்கு வந்த பிறகுதான், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் அவர் தொடர்புடையவரா என்பது தெரிய வரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளியை தேடும் பணிக்காக திருவள்ளூர் எஸ்பி விவேகானந்தா சுக்லாவின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
17 தனிப்படைகள் மற்றும் 3 சிறப்புக் குழுக்களை சேர்ந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் உட்பட 500 போலீஸார் தமிழகப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளிலும் குற்றவாளியை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தீவிரமாக தேடி வருவது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT