Published : 25 Jul 2025 01:49 PM
Last Updated : 25 Jul 2025 01:49 PM
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாஸ், மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு வழங்கக் கோரி தமிழக உள்துறை செயலருக்கு எழுதியுள்ளதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு 2-ல் டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் பரத் சீனிவாஸ் (55). இவர் விருப்ப ஓய்வு கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், "குடும்ப சூழ்நிலை, மன உளைச்சலால் என்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, நான் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இவரை, காவல் துறையில் சாத்தியமற்ற சில வேலைகளை செய்யச் சொல்லி உயரதிகாரிகள் வற்புறுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து டிஎஸ்பி பரத் சீனிவாசிடம் கேட்டபோது, ‘‘நான் மன உளைச்சலில் இருந்தது உண்மைதான். அதனால் விருப்ப ஓய்வு கடிதம் தயார் செய்து நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தேன். எனது நலனில் அக்கறை கொண்ட பலர் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் எனது கடிதத்தை யாருக்கும் அனுப்வில்லை’’ என்றார்.
"காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலையா?" - பழனிசாமி கண்டனம்: இந்த சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசும்போது, "மயிலாடுதுறையில் நேர்மையாக பணிபுரிந்த டிஎஸ்பியின் (சுந்தரேசன்) வாகனத்தை பறித்து, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
அதேபோல, தற்போது திருச்சியில் குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாஸ் மன உளைச்சலால் பணியை ராஜினாமா செய்வதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலை என்றால் மக்களை யார் பாதுகாப்பது?. காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிடாததால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT