Published : 24 Jul 2025 09:23 PM
Last Updated : 24 Jul 2025 09:23 PM
காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே இரு குழந்தைகளை கொலை செய்த வழக்கில், தாய் அபிராமி மற்றும் அவரது ஆண் நண்பர் மீனாட்சி சுந்தரத்துக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவர், அபிராமி (25) என்ற மனைவி, அஜய் (7) என்ற மகன், கார்னிகா (4) என்ற மகளுடன் வசித்து வந்தார். அபிராமிக்கும், அருகாமையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பணி செய்து வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் முறை தவறிய உறவாக மாறியது. இருவரின் விவாகரம் வெளியில் தெரியவர, அவர்களை வீட்டில் கண்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து அபிராமியின் கணவரையும், இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேற அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் கடந்த 2018-ம் ஆண்டு முடிவு செய்தனர். இவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பதுபோல் காட்டுவதற்கான விஜய் மற்றும் குழந்தைகள் அஜய், கார்ணிகா ஆகியோருக்கு உணவில் தூக்க மாத்திரகளை அதிகமாக கலந்து அபிராமி கொடுத்துள்ளார். இதில் குழந்தை கார்ணிகா மட்டுமே இறந்தார். மறுநாள் காலையில் விஜய் வேலைக்குச் சென்றுவிட்டார். மயக்க நிலையில் இருந்து குழந்தை அஜய்யை கழுத்தை நெறித்து கொன்றார்.
இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம், அபிராமி இருவரும் கோயம்பேடு சென்று தென்மாவட்டத்தை நோக்கி பயணித்தனர். வீட்டுக்கு வந்த விஜய், குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து விசாரித்த போலீஸார், இவர்கள் இறந்த்தற்கும், அபிராமிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரது செல்போன் சிக்னல் மூலம் பிடித்து விசாரித்தனர். அப்போது, இந்தக் கொலை சம்பவத்தில் மீனாட்சி சுந்தரத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிந்த்து. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல். குற்றம்சாட்டப்பட்ட அபிராமி, மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளிக்கும்போது, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், மனித உரிமை ஆர்வலருமான கிருஷ்ணய்யரின் கருத்துகளை உதாரணமாக காட்டிய நீதிபதி செம்மல், ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று நீதிமன்றம் செயல்பட முடியாது. அதேபோல், இவர்களின் கொடுங்குற்றத்தை மன்னிக்கவும் முடியாது. ஆயுள் தண்டனை என்பது இவர்கள் செய்த குற்றத்துக்கு குறைவானது என்பதால், சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்’ என்றார். இந்தத் தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்திலேயே அபிராமி கதறி அழுதார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT