Published : 24 Jul 2025 10:15 AM
Last Updated : 24 Jul 2025 10:15 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே போதை யில் தகராறு செய்த மகனை கொலை செய்துவிட்டு, உடல் நலமில்லாமல் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் கடலையூர் சாலையில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
மகன் தர்மதுரை (23) கூலி வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் இருந்த தர்மதுரை, அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வந்து பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மது குடித்து விட்டு பொதுமக்களிடம் தகராறு செய்ததாக தர்மதுரை மீது கோவில்பட்டி காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தர்மதுரையை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு மருதுபாண்டி வேலைக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக கடந்த 16-ம் தேதி தர்மதுரை ஊருக்கு வந்தார். விசாரணை முடிந்ததும், அவரை மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு செல்லும்படி மருதுபாண்டி அறிவுறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தர்மதுரை வீட்டில் இருந்து கொண்டு மதுபோதையில் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை மருதுபாண்டியிடம் குடிக்க பணம் கேட்டு தர்மதுரை தகராறு செய்து தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த மருதுபாண்டி, தர்மதுரையை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையை மறைப்பதற்காக தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடப்பதாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். வீட்டுக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் தர்மதுரையை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், தர்மதுரை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நாலாட்டின் புதூர் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து தர்மதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் மூச்சு விட முடியாமல் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. டிஎஸ்பி ஜெகநாதன், ஆய்வாளர் செந்தூர் பாண்டி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தியதில் தனது மகனை தலையணை வைத்து முகத்தை அமுக்கி கொலை செய்ததை மருதுபாண்டி ஒப்புக்கொண்டார். மருது பாண்டியை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT