Published : 24 Jul 2025 06:40 AM
Last Updated : 24 Jul 2025 06:40 AM
சென்னை: சென்னை வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள சாமி தெருவைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகர் அப்ரோஸ். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை மற்றும் சாலையோரம் உள்ள நடைபாதை சேதமடைந்து காணப்பட்டுள்ளது.
இதை சரி செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மாநகராட்சி உதவிப் பொறியாளருக்கு போனிலும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சாலை சரி செய்யப்படவில்லையாம்.
இதையடுத்து, மாநகராட்சி உதவிப் பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக அப்ரோஸ் காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தாராம். ஆனால், அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், ஆத்திரம் அடைந்த அப்ரோஸ் பழுதடைந்த சாலையை சரி செய்யாத சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்தும், காவல் ஆணையரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், காவல் ஆணையருக்கு கருப்புக் கொடி காட்டும் வகையில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
செல்போனில் பேஸ்புக் லைவ் வீடியோ போட்டுக் கொண்டே காவல் ஆணையர் செல்லும் நுழைவு வாயில் அருகே காரில் வந்தபோது, அப்ரோஸை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் மற்றும் பெரியமேடு போலீஸார் கைது செய்தனர். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT