Published : 24 Jul 2025 06:47 AM
Last Updated : 24 Jul 2025 06:47 AM

நாமக்கல் கிட்னி விற்பனை புகார்: தானமாக வழங்கியவர், பெற்றவர்களிடம் சிறப்பு குழு விசாரணை

நாமக்கல்/சென்னை: பள்​ளி​பாளை​யத்​தில் கிட்னி விற்​பனை புகாரைத் தொடர்ந்​து, நாமக்​கல் மாவட்​டத்​தில் தான​மாக சிறுநீரகத்தை வழங்​கிய​வர்​கள் மற்​றும் பெற்​றவர்​களிடம் சிறப்​புக் குழு​வினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யத்​தில் ஏழை, எளிய விசைத்​தறி கூலித் தொழிலா​ளர்​களை மூளைச்​சலவை செய்து அவர்​களது கிட்​னியைத் தான​மாக வழங்​கு​வ​தாகக் கூறி சிலர் விற்​பனை செய்​வ​தாக புகார் எழுந்​தது.

மேலும், இதுதொடர்​பான ஆடியோ, வீடியோ பதிவு​கள் சமூக வலை​தளங்​களில் வைரலானது. இந்​நிலை​யில், இப்​பு​கார் தொடர்​பாக விசா​ரணை மேற்​கொள்ள தமிழ்​நாடு சுகா​தார திட்ட இயக்​குநர் டாக்​டர் வினித் மற்​றும் சுகா​தா​ரத் துறை சட்​டப்​பிரிவு துணை இயக்​குநர் மீனாட்சி சுந்​தரேசன் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்​து​வக் குழுவை அரசு அமைத்​துள்​ளது.

இக்​குழு​வினர் நாமக்​கல் மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களாக முகாமிட்​டு, பல்​வேறு இடங்​களில் ஆவணங்​கள் மற்​றும் விவரங்களைச் சேகரித்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதனிடையே, நாமக்​கல் மாவட்​டத்​தில் குறிப்​பாக பள்​ளி​பாளை​யம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​யில் கிட்​னியைத் தான​மாக வழங்​கிய​வர்​கள், பெற்​றவர்​கள் தொடர்​பான பட்​டியலை பெற்று அதில் உள்ள நபர்​களின் வீடு​களுக்​குச் சென்று விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

தானம் வழங்​கிய​வரின் குடும்​பம், பொருளாதார நிலை குறித்​தும், தானம் வழங்க சுகா​தா​ரத் துறை​யில் சமர்ப்​பித்​துள்ள ஆவணங்​களின் விவரங்​கள் சரி​யாக உள்ளதா? எனவும் விசாரித்து வரு​கின்​றனர். மேலும், தான​மாக பெற்ற வெளிமாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​களின் வீடு​களுக்​குச் சென்​றும், சிலரை சென்னை மற்​றும் திருச்​செங்​கோட்​டுக்கு வரவழைத்​தும் விசா​ரணை நடத்த திட்​ட​மிட்டுள்​ளனர்.

தானம் என்ற பெயரில் பணம் பரி​மாற்​றம் மூலம் கிட்னி பெறப்​பட்​டுள்​ள​தா? என்ற கோணத்​தி​லும் விசா​ரணை நடை​பெறுகிறது. அதே​போல், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த மருத்​து​வ​மனை​களின் விவரங்​களை​யும் சேகரித்​துள்​ளனர். அடுத்த கட்​ட​மாக மருத்​து​வ​மனை​களி​லும் விசா​ரணை நடத்த உள்​ளனர். அதன் அடிப்​படை​யில் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை இருக்​கும் எனசுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

சுகாதாரத் துறை உத்தரவு: இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க கடந்த 18-ம் தேதி தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.வினீத் நியமிக்கப்பட்டார்.

இந்த விசாரணையின் அடிப்படையில் முதல்கட்ட அறிக்கையை எஸ்.வினித் அரசுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனைக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தை பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x