Published : 23 Jul 2025 01:57 PM
Last Updated : 23 Jul 2025 01:57 PM

வேலூர் உணவக ஊழியர் கொலை: மனைவி, காதலன் கைது

ஒடுக்கத்தூர் அருகே உணவக ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி, காதலனை வேப்பங்குப்பம் காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகேயுள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (36). கேட்டரீங் டெக்னாலஜி படித்துள்ள அவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாரத் தனது மனைவி நந்தினி மற்றும் மகள்களை சொந்த ஊரில் விட்டுவிட்டு தாம்பரத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊருக்கு வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மனைவி மற்றும் இளைய மகளுடன் குருவராஜ பாளையம் பகுதியில் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் கிடந்துள்ள தென்னை மட்டைகளை கடந்து வாகனம் சென்றபோது மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாரத்தை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதில், பாரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலறிந்த வேப்பங்குப்பம் காவல் துறை ஆய்வாளர் முத்துச்செல்வன் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று பாரத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து பாரத்தின் மனைவி நந்தினி மற்றும் இளைய மகளை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (25) என்பவர் தனது தந்தையை வெட்டியதாக பாரத்தின் மகள் கூறியுள்ளார். உடனடியாக அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் நந்தினிக்கும், சஞ்சய்க்கும் இடையே கூடா நட்பு இருந்துள்ளது. இதற்கு, இடையூறாக இருந்த பாரத்தை இருவரும் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நந்தினி மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் காவல் துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x