Published : 23 Jul 2025 05:58 AM
Last Updated : 23 Jul 2025 05:58 AM
நாமக்கல்: பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக திருச்செங்கோட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் தொழிலாளர்களின் கிட்னியை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அண்மையில், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண், தனது கிட்னியை பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்ற இடைத்தரகர் மூலம் விற்பனை செய்த தகவல் வெளியானது.
இதுதொடர்பாக இடைத்தரகர் ஆனந்தன் மீது பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினித், சுகாதாரத் துறை சட்டப்பிரிவு துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சீதாராமன் ஆகியோர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தனர். அவர்கள் நேற்று காலை திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவண சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கிட்னி தானம் செய்தவர்கள், அவற்றைப் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விவரங்களை குழுவினர் திரட்டினர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையத்தில் சிறப்பு மருத்துவக் குழுவினர் 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT