Published : 22 Jul 2025 11:15 AM
Last Updated : 22 Jul 2025 11:15 AM
நாமக்கல்: பள்ளிபாளையத்தில் கிட்னி தானம் செய்யும் போர்வையில் விற்பனையில் பெண் உள்பட 5 பேரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான இடைத்தரகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கிட்னியை தானமாக வழங்கும் போர்வையில் விற்பனை செய்துள்ளார். இதற்கு பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்தன் (55) என்பவர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின்பேரில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஆனந்தன் மீது பள்ளிபாளையம் அரசு மருத்துமவனை மருத்துவ அலுவலர் வீரமணி மூலம் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இடைத்தரகர் ஆனந்தனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கடந்த 18-ம் தேதி சென்னை சுகாதாரத் துறை சட்ட இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளிபாளையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிட்னியை தானமாக கொடுக்கும் போர்வையில் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது அவர்கள் அளித்த தகவலின்படி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடைவிதித்து சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றையும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணித்து வருகின்றனர். இச்சூழலில் நேற்று முன்தினம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கிட்னியை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் விற்பனை செய்ததாக பேசிய ஆடியோ மற்றும் வீடியோ வெளியானது. இதன் உண்மைத் தன்மை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகினற்னர்.
இதனிடையே கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொள்ள பள்ளிபாளையம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் கிட்னி விற்பனையில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகார் மனு: விசைத்தறி தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களின் கிட்னியை தானம் என்ற போர்வையில் விற்பனை செய்யும் இடைத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஏஐடியுசி நாமக்கல் மாவட்ட குழுவினர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் விசைத்தறிகள் நிறைந்துள்ளன. இவற்றில் பணிபுரியும் தொழிலார்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தும் இடைத்தரகர்கள் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி கிட்னியை தானமாக வழங்கும் போர்வையில் விற்பனை செய்ய வைக்கின்றனர்.
அதன்மூலம் கிடைக்கும் சிறு தொகையை ஏழை தொழிலார்களுக்கு வழங்கி விட்டு இடைத்தரகர்கள் பெரும் லாபம் பெறுகின்றனர். தொழிலாளர்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்வதற்கு அடிப்படையாக இருப்பது கந்துவட்டி மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் நெருக்கடிகளே காரணமாகும்.
தற்போது பள்ளிபாளையத்தில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு கிட்னி விற்பனையில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT