Published : 22 Jul 2025 06:49 AM
Last Updated : 22 Jul 2025 06:49 AM
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாரணாபுரம்-அனுப்பங்குளம் சாலையில் ஸ்ரீமாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம்போல் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் பேன்ஸி நவீன பட்டாசுக்கு தேவையான மணி மருந்து கொண்டு செல்லும்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
இதில் அங்கு பணிபுரிந்த முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கார்த்திகேயன் (24), லட்சுமி (45), சங்கீதா (40) ஆகிய 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும்அருகே உள்ள அறைகளுக்கும் தீ பரவியதில் 6 அறைகள் சேதமடைந்தன.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த முனியசாமி மனைவி நாகலட்சுமி (55), தங்கராஜ் மனைவி மாரியம்மாள் (50) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டாசு ஆலை உரிமம் ரத்து: விபத்துக்கான காரணம் குறித்து பெசோ அதிகாரிகள், வருவாய்த் துறையினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். விபத்து குறித்து ஆலை உரிமையாளர் கோபி, மேலாளர், போர்மேன் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போர்மேன் செல்வக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் 3-வது விபத்து: இதற்கு முன்னர் சிவகாசி அருகே சின்னகாமன் பட்டிபட்டாசு ஆலையில் ஜூலை 1-ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஜூலை 6-ல் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.
நேற்று சிவகாசி அருகே நாரணாபுரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே மாதத்தில் 3 வெடிவிபத்து களில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தது பட்டாசு தொழிலாளர் களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT