Published : 21 Jul 2025 08:50 PM
Last Updated : 21 Jul 2025 08:50 PM
சென்னை: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், குற்றவாளியின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர், கடந்த 12ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். அன்று மதியம் பள்ளி முடிந்ததால், ஆரம்பாக்கத் தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, அதே பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவரை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, தப்பியோடினார்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவா ளியை தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி பற்றிய தகவல் தெரிவித்தார் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிவிப்பில், ”திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் கடந்த 12ம் தேதி 10 வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் போக்சோ உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தனிப்படை போலீஸார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீஸாரின் விசாரணையின் போது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், சந்தேக நபரின் பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இவ்வழக்கு விசாரணைக்கு உதவியாக சந்தேக நபரை அடையாளம் காணவும், வழக்கை துப்பு துலக்கவும் பயனுள்ள குறிப்பிடத்தக்க மற்றும் நம்பகமான தகவலை வழங்குபவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.
சந்தேக நபர் தொடர்பான ஏதேனும் தகவல் அல்லது விவரம் தெரிந்தவர்கள் இதற்கென ஒதுக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட காவல் செல்போன் எண் 99520 60948 என்ற எண்ணில் நேரடி அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT