Published : 20 Jul 2025 09:00 AM
Last Updated : 20 Jul 2025 09:00 AM
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகத்தின் பேரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்த சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து, அவரை தூக்கி சென்று பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி தப்பி ஓடினார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை சீரானதால் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில், குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லூர் அருகே சந்தேகத்தின் பேரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஆர்ப்பாட்டம்: சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் கடந்த 8 நாட்களாக கைது செய்யப்படாததை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த அதிமுக-வினர், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து ஊர்வலமாக காவல் நிலையத்துக்கு வந்த அவர்கள், காவல் நிலையத்தில் நுழைய முற்பட்டபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து, காவல் நிலையம் எதிரே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையத்துக்கு அதிமுக சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், “சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT