Published : 19 Jul 2025 08:53 PM
Last Updated : 19 Jul 2025 08:53 PM
திருப்பத்தூர்: காவல் நிலையத்தில் ஆய்வாளர் முன்னிலையில் திமுக நிர்வாகியை தாக்கிய பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த கோகிலராணி உள்ளார். இங்கு 3 மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக தனுஷ்கோடி பணிபுரிந்தார். அப்போது தனுஷ்கோடி தன்னிடம் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார் என்று பேரூராட்சித் தலைவரின் கணவர் நாராயணன், திருப்பத்தூர் போலீஸில் புகார் செய்தார். அதேபோல, நாராயணன் தன்னை மிரட்டியதாக ஆட்சியர், எஸ்.பி.யிடம் தனுஷ்கோடி புகார் கொடுத்தார்.
இதனிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக தனுஷ்கோடி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பேரூராட்சித் தலைவரின் கணவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த இரு தரப்பினரையும் திருப்பத்தூர் போலீஸார் இன்று (சனிக்கிழமை) அழைத்தனர்.
இன்று பிற்பகல் திருப்பத்தூர் காவல் நிலையத்துக்கு தனுஷ்கோடி, பேரூராட்சித் தலைவரின் கணவர் நாராயணன், 5-வது வார்டு கவுன்சிலர் கோமதியின் கணவரும், திமுக நகர துணைச் செயலாளருமான சண்முகம் ஆகியோர் வந்தனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் ஆய்வாளரின் மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்த தனுஷ்கோடி, அதை சண்முகத்தின் மீது எறிந்தார். இதில் சண்முகம் மண்டை உடைந்தது. காயமடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சண்முகத்தின் உறவினர்கள் மற்றும் திமுகவினர் பேரூராட்சி செயல் அலுவலரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனுஷ்கோடியை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT