Published : 18 Jul 2025 01:52 PM
Last Updated : 18 Jul 2025 01:52 PM

திருச்சி திமுக பெண் கவுன்சிலர் வீடு சூறை - ‘மாஸ்க்’ கும்பல் அட்டூழியம்

மர்ம நபர்களால் நேற்று அடித்து நொறுக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மலர்விழி வீடு. | படம்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சி: திருச்சியில் திமுக பெண் கவுன்சிலர் வீட்டை சூறையாடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி கே.கே.நகர் அருகில் உள்ள லூர்துசாமி பிள்ளை காலனியில் வசித்து வருபவர் மலர்விழி. திமுகவைச் சேர்ந்த இவர், திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மலர்விழி வீட்டுக்கு நேற்று மாலை முகக்கவசம் அணிந்து வந்த கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வீட்டுக்குள் இருந்த டி.வி, கதவு, ஜன்னல், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை அடித்து உடைத்து. வீட்டை சூறையாடிவிட்டு தப்பியோடிவிட்டது.

இதையடுத்து, வீட்டை சூறையாடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கே.சாத்தனூர் சாலையில் கவுன்சிலர் மலர்விழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கே.கே.நகர் போலீஸார், அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘திருச்சி மாநகராட்சியின் ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே மழைநீர் வடிகால் கட்டும் பணியை மேற் கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கவுன்சிலர் தரப்பினர் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை செய்து வந்த பணியாளர்களை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர் தரப்பினர் கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்’’ என்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கவுன்சிலர் மலர்விழி தரப்பினர் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

‘போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை’ - மலர்விழி தரப்பினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மழைநீர் வடிகால் கட்டுமானப் பணி தொடர்பான பிரச்சினை குறித்து நேற்று முன்தினம் இரவு கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்காது. ஒரு ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு?’’ என ஆதங்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x