Published : 18 Jul 2025 07:20 AM
Last Updated : 18 Jul 2025 07:20 AM
சென்னை: ஒரே வீட்டை இரண்டாவது முறையாக குத்தகைக்கு தருவதாகக் கூறி ரூ.10.50 லட்சம் மோசடி செய்த வீட்டு உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன் (25). இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் குத்தகைக்கு வீடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அயனாவரம், பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் சிவகுமார் (56) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர், மணிகண்டனிடம் தனக்குச் சொந்தமான வீடு இதே பகுதியில் உள்ளது. அந்த வீட்டை ரூ.15 லட்சத்துக்கு குத்தகைக்கு கொடுப்பதாகவும், தற்போது வசித்து வருபவர்கள் இன்னும் 2 மாதங்களில் வீட்டை காலி செய்ததும் குடிபெயரலாம் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய மணிகண்டன் ரூ.15 லட்சத்தை சிவகுமாரிடம் கொடுத்து, குத்தகை ஒப்பந்த பத்திரம் போட்டுள்ளார்.
ஆனால் சிவகுமார் சொன்னபடி வீட்டை காலி செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.4.5 லட்சம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.10.5 லட்சத்தை கேட்டபோது, பணத்தைத் தர முடியாது என மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கடந்த 14-ம் தேதி இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, வீட்டை குத்தகைக்கு தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சிவகுமாரை கைது செய்தனர்.
விசாரணையில் சிவகுமார், அயனாவரம் பாரதி நகரில் உள்ள அவரது வீட்டை தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்து அப்பணத்தை பயன்படுத்தி தொழில் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டது. அந்த வீட்டை ஏற்கெனவே ஒருவருக்கு குத்தகைக்கு விட்டிருந்த நிலையில், ஓஎல்எக்ஸ் மூலம் விளம்பரம் செய்து, மணிகண்டன் மற்றும் மேலும் ஒருவருக்கு அதே வீட்டை குத்தகைக்கு விடுவதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.இதையடுத்து, சிவகுமாரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT