Published : 18 Jul 2025 06:55 AM
Last Updated : 18 Jul 2025 06:55 AM
சென்னை: பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.5.24 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைதான நிலையில், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகருக்கு மும்பை போலீஸார் சம்மன் வழங்கியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்தவர் அஜய் ஜெகதீஷ் கபூர்(62). தனியார் நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாண்மை இயக்குநராக உள்ளார். இவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி கேரளாவை சேர்ந்த ரோகன் மேனன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்தாண்டு அக்டோபர் முதல் கடந்த மாதம் 30-ம் தேதி வரையிலான தேதியில் பல்வேறு தவணைகளில் ரூ.5.24 கோடி பெற்றுள்ளனர்.
ஆனால், உறுதியளித்தபடி லாப பணம் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் அவர் முதலீடு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கபூர், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காவல் துறையில் புகார் தெரிவித்தார். இதையடுத்து புகாருக்குள்ளான ரோகன் மற்றும் அவரது கூட்டாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 4-ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
இது ஒருபுறம் இருக்க இந்த வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் நண்பர்கள் எனக் கூறப்படும் கிண்டி மணிகண்டன், கொளத்தூர் ஹரி பாண்டி ஆகிய மேலும் இருவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கே.கே.நகரில் வசிக்கும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரை கைது செய்து மும்பை அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.
ஆனால், அவரோ தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக கூறி மருத்துவச் சான்றிதழ்களை மும்பை போலீஸாரிடம் காண்பித்துள்ளார். இதையடுத்து, வரும் 22-ம் தேதி மும்பையில் நேரில் ஆஜராகும்படி சம்மன் கொடுத்துவிட்டு மும்பை போலீஸார் புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து மும்பை போலீஸ் தரப்பில் கூறுகையில், ``கைதான ரோகன் ரூ.5.24 கோடியை, சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளார். அந்த பணத்தை ரவீந்தர் கிரிப்டோ கரன்சியாக மாற்றி வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார். மோசடிக்கு உடந்தையாக இருந்ததை உறுதி செய்ததன் அடிப்படையில் ரவீந்தரை கைது செய்ய வந்தோம்'' என தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT