Last Updated : 15 Jul, 2025 08:20 PM

 

Published : 15 Jul 2025 08:20 PM
Last Updated : 15 Jul 2025 08:20 PM

சேலத்தில் தூத்துக்குடி ரவுடி வெட்டி கொலை - உணவகத்தில் பயங்கரம்

சேலம்: சேலத்தில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் என்ற பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.

தூத்துக்குடி தந்தை பெரியார் வீதியைச் சேர்ந்த மதன் (28) பிரபல ரவுடி. இவர் கொலை வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீன் பெற்று, நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 10-ம் தேதி முதல் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், ரவுடி மதன் அவரது மனைவி மோனிஷாவுடன் இன்று அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு, அருகே உள்ள உணவகத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த மதனை, திடீரென 6 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவருடன் இருந்த மோனிஷா, அலறியபடி அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு ஓடிச்சென்று, தனது கணவர் தாக்கப்படுவதை கூறியுள்ளார்.

இதனிடையே, மதனை கொலை வெறியுடன் தாக்கிய மர்ம நபர்கள், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். தகவலறிந்து அஸ்தம்பட்டி உதவி ஆணையர் ஆணையர் அஸ்வினி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மதனின் உடலை மீட்டு,சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை நடந்த இடத்தை காவல் துணை ஆணையர் (தெற்கு) கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே, கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட 4 தனிப்படைகள், சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். காவல் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், 6 பேர் கொண்ட கும்பல் கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, முதல் கட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில், ரடிவு மதன் மீது 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மாரடோனா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. அதில் மதன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த மதன், நீதிமன்ற உத்தரவுபடி சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில், தூத்துகுடி கொலையில் பழிக்குப் பழியாக தற்போது மதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்று போலீஸார் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x