Published : 15 Jul 2025 05:46 PM
Last Updated : 15 Jul 2025 05:46 PM
சென்னை: காதலிக்க மறுத்த மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கி 21 வயதுடைய மாணவி ஒருவர் பி.டெக். படித்து வருகிறார். இவரது பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியான பல கணக்குகளை மர்ம நபர் ஒருவர் தொடங்கினார். மேலும் அவர் அந்த மாணவியின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாகச் சித்தரித்து அதில் பதிவேற்றம் செய்தார்.
அதிர்ச்சி அடைந்த மாணவி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவியின் பெயரில் சமூக வலைதளத்தில் போலியான கணக்கு தொடங்கி, அதில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தது சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணி செய்து வந்த தருமபுரி மாவட்டம், பூவல்மடுவு பகுதியைச் சேர்ந்த கணபதி (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நடைபெற்ற விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவி கைது செய்யப்பட்ட கணபதியிடம் நட்புடன் பேசி, பழகி உள்ளார். கணபதி தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்ளும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து, அவருடனான நட்பை மாணவி துண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்து, பழிவாங்கும் நோக்கில் கணபதி, மாணவி பெயரில் போலி கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT