Published : 15 Jul 2025 01:58 PM
Last Updated : 15 Jul 2025 01:58 PM
பல்வேறு கொலைகள், வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை சார்பில், கடந்த 2023-ம் ஆண்டு தீவிரவாத தடுப்புப் பிரிவு மண்டலம் வாரியாக உருவாக்கப் பட்டது. காவல் கண்காணிப் பாளர்கள் தலைமையில் இந்த பிரிவு இயங்கி வருகிறது. வெடிகுண்டு வழக்குகள் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் தற்போது விசாரிக்கப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளி முகமது அலி ஆகியோரை கடந்த வாரம் சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், ஆந்திரா போலீஸார் உதவியுடன் அங்குள்ள அன்னமய்யா மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தேடப்பட்ட அபுபக்கர் சித்திக் மீது பல்வேறு வெடிகுண்டு வெடிப்பு வழக்குகள், வகுப்புவாத கொலை வழக்குகள் உள்ளன.
குறிப்பாக, 1995-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு, அதேஆண்டு நாகூரில் புக் வெடிகுண்டு வழக்கு, கோவையில் வெரைட்டிஹால் சாலை போலீஸ் குடியிருப்புப் பகுதியில் நடந்த வெடிகுண்டு வழக்கு, இந்து இயக்க தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கு, மதுரையில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி வந்த போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்ளிட்டவை இவர் மீது உள்ளன.
இதுதொடர்பாக கோவை காவல்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘கைதான அபுபக்கர் சித்திக் முக்கிய குற்றவாளியாவார். வகுப்புவாத கொலைகளில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோருக்கு இவர் ‘காட் பாதர்’ போல் இருந்துள்ளார். போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அபுபக்கர் சித்திக் கோவை, ஈரோடு, மூணாறு, குஜராத், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது.
இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாத செயல்களில் ஈடுபட வைப்பதில் கில்லாடியான அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகள் தயாரிப்பதில் வல்லவர் ஆவார். அவரை கைது செய்தபோது, வீட்டில் ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவாக இருந்தாலும், தீவிரவாத எண்ண ஓட்டத்தில் அவர் தொடர்ந்து இருந்துள்ளார்.
இவர் யாரை சந்தித்தார், இத்தனை ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த இவருக்கு நிதியுதவி செய்து பக்கபலமாக இருந்தது யார், இளைஞர்கள மூளைச்சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபட வைப்பதற்காக பயங்கரவாத அமைப்பை ஏதாவது உருவாக்கியுள்ளரா ? என்பன தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த வழக்குகள் தொடர்பாக இவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அந்தந்த மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கோவை வழக்கில் இவரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT