Published : 15 Jul 2025 01:22 PM
Last Updated : 15 Jul 2025 01:22 PM
கோவை பாலக்காடு சாலையில் நடைபெறும் தொடர் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க, அங்கு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தொழில் நகரமான கோவைக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் சமூக, வர்த்தகத் தொடர்புகள் அதிகம் உண்டு. கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் கேரளாவுக்கு ஏராளமான சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்வதற்கு பல்வேறு வழித்தடங்கள் இருந்தாலும் பாலக்காடு சாலை முக்கியமானதாகும். இவ்வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.
கோவையிலிருந்து தங்கக் கட்டிகள், நகைகளை வாங்கிக் கொண்டு கேரளாவுக்குச் செல்லும் வியாபாரிகள் பிரதானமாக பயன்படுத்துவது பாலக்காடு சாலையாகும். இதனால் வர்த்தகர்களை குறித்து பாலக்காடு சாலையில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. கடந்த மாதம் இறுதியில் நகைப்பட்டறை உரிமையாளரை தாக்கி 1.25 கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர், நகைப்பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் கேரளா வுக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.70 லட்சம் பணம் பிடிபட்டது. அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இருவரை தாக்கி ரூ.40 லட்சம் கொள்ளையடி க்கப்பட்டது. பாலக்காடு சாலையை மையப்படுத்தி தொடர்ந்து குற்றங்கள் நடக்கின்றன.
இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘கணக்கில் வராமல் தங்கக்கட்டிகள், பல லட்சம் ஹவாலா பணம் கடத்தல் போன்றவை பாலக்காடு சாலையை மையப்படுத்தி அதிகளவில் நடக்கின்றன. கணக்கில் வராத தங்கம், பணத்தை எடுத்துச் செல்லும் நபர்களை தாக்கி அதை பறித்துக் கொண்டால், பறிகொடுத்தவர்கள் போலீஸாரிடம் புகார் அளிக்க மாட்டார்கள் என நினைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபடு கின்றனர். இதற்கு அப்பகுதிகளில் போலீஸாரின் கண்காணிப்பு, ரோந்துப் பணி முழுமையாக இல்லை என்பதே முக்கிய காரணமாகும். எனவே, இங்கு போலீஸாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, ‘‘மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பாலக்காடு சாலையில், இதுவரை குற்றங்கள் நடந்த இடங்களை நேற்று முன்தினம் நான் கள ஆய்வு செய்தேன். இச்சாலையில் வேலந்தாவளம், வாளையாறு ஆகிய இடங்களில் ஏற்கெனவே சோதனைச் சாவடிகள் உள்ளன. இங்கு ஒரு ஷிப்ட்டுக்கு தலா இரு காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், எட்டிமடை முதல் வாளையாறு வரை மக்கள் பார்வையில் படும்படி போலீஸாரின் ரோந்து குறைவாக உள்ளது.
எனவே, எட்டிமடை அருகே கூடுதலாக ஒரு சோதனைச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கண்டெய்னர் வடிவ செக்போஸ்ட் எட்டிமடையில் நிறுவப்பட்டுள்ளது. இச்சோதனைச் சாவடியை கடந்துதான் பாலக்காடு நோக்கி செல்லும் வாகனங்கள் எட்டிமடை மேம்பாலம் மீதோ, அருகேயுள்ள சர்வீஸ் ரோட்டிலோ செல்ல முடியும். ஓரிரு தினங்களில் இச்சோதனைச் சாவடி பயன்பாட்டுக்கு வரும்.
அங்கு பேரிகார்டர் வைக்கப்பட்டு, வாகனங்கள் மெதுவாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர, எட்டிமடை - வாளையாறு இடையே ஒரு ஜீப் ரோந்து வாகனம் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடும். அதில் துப்பாக்கியுடன் ஒரு எஸ்.ஐ. இருப்பார். உடன் காவலர்கள் இருப்பர். மாவட்ட காவல்துறைக்குட்பட்ட உதவி ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் இந்த ரோந்து வாகனத்தில் இருப்பர். எட்டிமடை சோதனைச் சாவடியிலும் 4 காவலர்கள் பணியில் இருப்பர்.
அதேபோல், வாளையாறு, வேலந்தாவளம் சோதனைச் சாவடியிலும் முன்பு ஒரு ஷிப்ட்டுக்கு தலா 2 பேர் இருந்தனர். இது 4 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்போது, குற்றங்கள் நடப்பது தடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT