Published : 14 Jul 2025 09:03 PM
Last Updated : 14 Jul 2025 09:03 PM
திருப்பத்தூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞருக்கு சாகும் வரை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பத்தூர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்து.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெமினி ஜோசப் (40). இவரது மனைவி ரேவதி (36). தம்பதி இருவரும் தையல் கலைஞர்கள் என்பதால் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்வதால் அங்கேயே வீடு எடுத்து தங்கினர். இந்நிலையில், ரேவதி கர்ப்பமாக இருந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தன் தாய் வீடு உள்ள சித்தூர் மாவட்டத்துக்கு வர கோவையில் இருந்து ஜோலார் பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
இந்த ரயில் பிப்.7-ம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் - கே.வி.குப்பம் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது ரேவதி ரயிலில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த வந்தார். அப்போது, கழிப்பறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர், ரேவதியை வழிமறித்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை எதர்பாராத ரேவதி கூச்சலிட, அந்தப் பெட்டியில் பயணித்த பயணிகள் அங்கு விரைந்து வந்தனர்.
அந்த நேரத்தில் அந்த இளைஞர் ஓடும் ரயலில் இருந்து ரேவதியை கீழே தள்ளிவிட்டு அவர் வேறு பெட்டிக்கு மாறி தப்பினார். பெண் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கே ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கர்ப்பிணி பெண் ரேவதியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரேவதியின் கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து, ரயில்வே எஸ்பி உத்தரவு பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ருவந்திகா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டு அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இதில், ரேவதியிடம் தவறாக நடந்து கொண்ட நபர் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (27) என்பதும், இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் செல்போன் பறிப்பு வழக்கிலும், கடந்த 2024-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஹேமராஜை கைது செய்தனர். இதற்கிடையே, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரேவதியின் 4 மாத சிசு உயிரிழந்த நிலையில் அகற்றப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ரேவதி ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 11-ம் தேதி ஹேமராஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கான தண்டனை விவரம் ஜூலை 14-ம் தேதி (இன்று ) அறிவிக்கப்படும் என திருப்பத்தூர் நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்டு ஹேமராஜுக்கு, 7 பிரிவின் கீழ் வாழ்நாள் முழுவதும், அதாவது சாகும் வரை சிறை தண்டனையும், கடுங்காவல் ஆயுள் தண்டனை, அபராத தொகையாக ரூ.75 ஆயிரம் கட்ட தவறினால் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண் ரேவதிக்கு ரயில்வே துறை சார்பில் ரூ.50 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி மீனாகுமாரி தீப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT