Published : 14 Jul 2025 06:17 AM
Last Updated : 14 Jul 2025 06:17 AM
சென்னை: பயணிபோல் நடித்து, கால் டாக்ஸியை திருடி தப்பிய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (43). சென்னையில் தங்கி சொந்தமாக கால் டாக்ஸி ஓட்டிவருகிறார். இவர் கடந்த 11-ம் தேதி இரவு பயணி ஒருவரை கோயம்பேட்டில் இறக்கிவிட்டு சற்று தொலைவில் சென்று அடுத்த அழைப்புக்காக காத்திருந்தார்.
நள்ளிரவு பூந்தமல்லி செல்ல வேண்டி, வந்த அடுத்த புக்கிங்கில் தொடர்பு கொண்ட பயணி ஒருவரை கோயம்பேட்டில் றிக்கொண்டு செல்லும்போது, வாடிக்கையாளர், ‘மயக்கம் வருவதுபோல உள்ளது; குடிக்க தண்ணீர் வேண்டும்; கடையின் அருகில் நிறுத்துங்கள்’ என கூறியுள்ளார்.
சுரேஷ்குமார், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதற்குள் வாடிக்கையாளராக வந்தவர் கால் டாக்ஸியை ஒட்டிச்சென்றுவிட்டார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமார் இதுகுறித்து கோயம்பேடுகாவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கினர். இதில், வாடிக்கையாளர் போல நடித்து, கால் டாக்ஸியை திருடி தப்பியது சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த முகமது அஜ்மல் (27) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சொந்த கார் இல்லாததால் கார் ஒன்றை திருடி, அதை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காரை முகமது அஜ்மல் திருடியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT