Published : 13 Jul 2025 08:55 AM
Last Updated : 13 Jul 2025 08:55 AM
திருமலா பால் நிறுவன மேலாளரின் மரணம் தற்கொலைதான் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், அறிவியல்பூர்வமாக பார்க்கும்போது நவீன் தற்கொலை செய்து கொண்டதாகத் தான் தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்தை தடயவியல் நிபுணர்கள், போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், நவீன் கைகள் கட்டப்பட்ட விதம், அவர் அருகில் கிடந்த சிமெண்ட் பை ஆகிய ஆதாரங்களை வைத்து, தனது கைகளை தானே பின்னால் கட்டிக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வருகிறது.
சிவில், பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்னுடைய அனுமதி பெற்றுதான் விசாரிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளேன். எனது இந்த அறிவுறுத்தலை மீறி ரூ.40 கோடி கையாடல் புகாரை துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்துள்ளார். அதனால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவீனை துணை ஆணையர் பாண்டிய ராஜன் மிரட்டியதாக எந்த ஆதாரமும் இல்லை. நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் கூட இதுகுறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
சம்பவம் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, துணை ஆணையர் பாண்டியராஜனுக்கு நான்தான் விடுமுறை கொடுத்தேன். இந்த வழக்கில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை. மோசடி பணத்தை வைத்துதான் நவீன் நிலம் வாங்கியுள்ளார். அவை அனைத்தையும் திருப்பி தருவதாக நவீன் கூறும்போது, அவருக்கு மேலும் அழுத்தம் வருகிறது. அதனால், அவர் வாங்கிய நிலத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை மேலும் தொடர்கிறது. 54 போதை பொருள் நெட்வொர்க்குகள் பிடித்திருக் கிறோம். இதில் 23 வெளி நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். த.வெ.க-வினரின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கவில்லை. போலீஸார் அனுமதி கொடுக்கமாட்டார்கள் என அவர்களாகவே நினைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
பெண்கள் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி குற்றத்தில் ஈடுபட்டவர், புகார்தாரரை தொந்தரவு செய்தால் அது கடுமையான குற்றமாகும். இதை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT